Notification texts go here Contact Us Buy Now!

சங்க இலக்கியங்கள் - விரிவான தகவல்கள்

18 சங்க இலக்கிய நூல்கள்

சங்க இலக்கிய நூல்கள்
எட்டுத் தொகை நூல்களையும் பத்துப் பாட்டுகளையும் கொண்டது சங்க இலக்கியம்.  பழைய உரையாசிரியர்கள் இந்த இலக்கியத்தைச் ‘சான்றோர் செய்யுள்’ என்று குறிப்பிட்டார்கள்.   இது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது.  இதில் உள்ள பாடல்கள் அகம் (உள்) புறம் (வெளி) என்ற இரண்டு பகுதிகளைக் கொண்டது.  சங்க இலக்கியம் இயற்கை இலக்கியமும் ஆகும். பல வகை விலங்குகள், பறவைகள், பூச்சிகள், மரங்கள், செடிகள், கொடிகள், மலர்கள் யாவும் அதில் உள்ளன.

எட்டுத்தொகை

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறம் என்று இத்திறத்த எட்டுத் தொகை”.

நற்றிணை: இது ஒரு அக நூல். பல புலவர்களால் எழுதப்பட்டது.  இதில் மொத்தம் 400 பாடல்கள் உள்ளன.   இவற்றில் 1 பாடல் முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை (234). ஒரு பாடலின் சில பகுதிகள் கிடைக்கவில்லை (285). பாடல்கள்  8 – 13 வரிகள் கொண்டவை.

குறுந்தொகை: இது ஒரு அக நூல். பல புலவர்களால் எழுதப்பட்டது.  இதில் மொத்தம் 400 பாடல்கள் உள்ளன.  பாடல்கள் 4 – 8 வரிகள் கொண்டவை.

ஐங்குறுநூறு: இது ஒரு அக நூல். ஐந்து புலவர்களால் எழுதப்பட்டது.  இதில் மொத்தம் 500 பாடல்கள் உள்ளன.  குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை ஆகிய ஒவ்வொரு திணையிலும் நூறு பாடல்கள் கொண்டது.  ஓரம்போகியார் மருதத் திணைப் பாடல்களையும், அம்மூவனார் நெய்தற் திணைப் பாடல்களையும், கபிலர் குறிஞ்சித் திணைப் பாடல்களையும், ஓதலாந்தையார் பாலைத் திணைப் பாடல்களையும், பேயனார் முல்லைத் திணைப் பாடல்களையும் பாடியுள்ளனர்.  இந்த நூலில் 2 பாடல்கள் நமக்குக் கிடைக்கவில்லை (129,130) .  பாடல்கள் 3 – 6 வரிகள் கொண்டவை .

பதிற்றுப்பத்து: இது ஒரு புற நூல். சேர மன்னர்களுக்காக எழுதப்பட்ட நூல். பத்து மன்னர்களுக்காக, ஆளுக்கு 10 பாடல்கள் எழுதப்பட்டன.  ஆனால் 80 பாடல்கள் தான் நமக்குக் கிடைத்துள்ளன.   பாடல்கள் 8-56 வரிகள் கொண்டவை.

பரிபாடல்: இது அகமும் புறமும் கொண்ட நூல். பல புலவர்களால் எழுதப்பட்டது.  பாடல்கள் முருகனுக்கும், திருமாலுக்கும், வைகை நதிக்கும் எழுதப்பட்டன. மொத்தம் 70 பாடல்கள் எழுதப்பட்டன.  நமக்குக் கிடைத்தது 22 பாடல்கள்.  பாடல்கள் 32 – 140 வரிகள் கொண்டவை.

கலித்தொகை: இது ஒரு அக நூல். ஐந்து புலவர்களால் எழுதப்பட்டது.  இதில் மொத்தம் 150 பாடல்கள் உள்ளன.  பாடல்கள் 11 – 80 வரிகள் கொண்டவை.  ஆயர் குடியினரின் ஏறு தழுவுதல் பற்றிய விவரங்கள் இந்த நூலில் மட்டுமே உள்ளன.

அகநானூறு: இது ஒரு அக நூல். பல புலவர்களால் எழுதப்பட்டது.  இதில் மொத்தம் 400 பாடல்கள் உள்ளன.  பாடல்கள் 13 – 31 வரிகள் கொண்டவை.  மொத்தம் 200 பாடல்கள் பாலைத் திணையிலும்,  80 பாடல்கள் குறிஞ்சித் திணையிலும், 40 பாடல்கள் முல்லைத் திணையிலும், 40 பாடல்கள் நெய்தற் திணையிலும், 40 பாடல்கள் மருதத் திணையிலும் உள்ளன.

புறநானூறு: இது ஒரு புற நூல். பல புலவர்களால் எழுதப்பட்டது.  இதில் மொத்தம் 400 பாடல்கள் உள்ளன.  பாடல்கள் 4 – 40 வரிகள் கொண்டவை.  மூவேந்தர், குறு நிலமன்னர், பாணர், புலவர், விறலியர், கொடை, மறம், வீரர்கள்,  நாடு, மலை, போர், வீரத்தாய்மார்கள், இறந்த மன்னர்களின் புகழைப் பாடுதல், வாழ்க்கையின் நிலையாமை, மன்னர்க்குப் பெண் தர மறுத்தல் என்று பல செய்திகள் இதில் உள்ளன.  மேலும், பரணர், ஔவையார், கோவூர் கிழார், மாங்குடி கிழார் போன்ற பெரும் புலவர்கள் தங்களை பாணர்களாக பாவித்து பாடும் 32 பாடல்கள் உள்ளன.

பத்துப்பாட்டு
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய கோலநெடு நல் வாடை கோல் குறிஞ்சி பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து.”
இவற்றில் ஐந்து ஆற்றுப்படை நூல்கள்.  ஆற்றுப்படுத்தல் என்றால் ‘வழி காட்டுதல்’ என்று பொருள்.  திருமுருகாற்றுப்படை முருகனை அடையும் வழியைக் காட்டும் நூல்.  மற்ற நான்கு ஆற்றுப்படை நூல்களும் மன்னன் ஒருவனிடம் பரிசு பெற்ற பாணன் இன்னொரு பாணனுக்கு மன்னனிடம் சென்று பரிசு பெரும் முறையை விவரமாகக் கூறுவது.  மன்னர்கள் தமிழை வளர்த்த பாணர்களின் மேல் கொண்ட அன்பையும் மதிப்பையும் நாம் ஆற்றுப்படை நூல்களில் காணலாம்.

திருமுருகாற்றுப்படை (புலவராற்றுப்படை): இது ஒரு ஆற்றுப்படை நூல்.  317 அடிகளைக் கொண்டது. புலவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் முருகனைப்பற்றி எழுதியது. முருகனுடைய அறுபடை வீடுகளைப் பற்றிய செய்திகள் இதில் உள்ளன.  அவை திருப்பரங்குன்றம்,  திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), திருவாவினன்குடி (பழனி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (திருத்தணி), பழமுதிர்சோலை ஆகியவை.  முருகனுடைய 6 முகங்களின் இயல்பு, 12 கைகளின் தொழில் ஆகியவற்றைப் பற்றியும் விவரங்கள் உள்ளன.

பொருநராற்றுப்படை: இது ஒரு ஆற்றுப்படை நூல்.  248 அடிகளைக் கொண்டது.  புலவர் முடத்தாமக் கண்ணியார் சோழன் கரிகால் பெருவளத்தானுக்காக எழுதியது.  இதில் பாலை யாழ் மிகச் செம்மையாக வருணிக்கப்பட்டுள்ளது. ஒரு பாடகியின் பேரழகைப் புலவர் அழகாக விவரிக்கின்றார்.   சோழ மன்னன் கரிகாலன் தன்னை நாடி வந்த பாணனுக்கு நான்கு வெள்ளைக் குதிரைகள் கொண்ட தேரைக் கொடுத்து, ஏழு அடி பின் நடந்து, பாணனைத் தேரில் ஏறக் கூறிச் சிறப்பிப்பதாகக் குறிப்பு உள்ளது.  சோழ நாட்டின் வளமும் காவிரியின் வளமும் விவரிக்கப்பட்டுள்ளன.

சிறுபாணாற்றுப்படை: இது ஒரு ஆற்றுப்படை நூல்.  269 அடிகளைக் கொண்டது.  புலவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் குறுநில மன்னன் ஓய்மான் நாட்டு நல்லியக்கோடனுக்காக எழுதியது.  இந்தப் பாட்டில் சேர நாட்டின் வளம், சோழ நாட்டின் வளம், பாண்டிய நாட்டின் பெருமை, கடையெழு வள்ளல்களின் சிறப்பு யாவும் கூறப்பட்டுள்ளன.  மன்னனை நோக்கிச் செல்லும் வழியில், அவனுடைய நாட்டில் வெவ்வேறு நிலங்களில் வாழ்பவர்கள் பாணர்க்குச் செய்யும் உபசரிப்பைப் பற்றியும் அறிகின்றோம்.

பெரும்பாணாற்றுப்படை: இது ஒரு ஆற்றுப்படை நூல்.  500 அடிகளைக் கொண்டது.  புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் குறுநில மன்னன் தொண்டைமான் இளந்திரையனுக்காக எழுதியது. இந்தப் பாட்டில், பாதையில் மாட்டு வண்டியில் செல்லும் உப்பு வணிகர், கழுதையின் மேல் பண்டங்களைக் கொண்டு செல்லும் பிற வணிகர், காட்டு மக்களின் வாழ்க்கையும் விருந்தோம்பலும், குறிஞ்சி நிலத்தில் வாழ்வோர் வாழ்க்கை முறை, இடையர் குடியிருப்பு, முல்லை நிலத்தினர் பயணிகளுக்குக் அளிக்கும் உணவு, மருத நிலத்தின் காட்சிகளும் விருந்தோம்பலும், சர்க்கரை ஆலை, மீனவர் குடியிருப்பும் விருந்தோம்பலும், அந்தணர் குடியிருப்பும் விருந்தோம்பலும், கலங்கரை விளக்கம், காஞ்சீபுரத்தின் சிறப்பு, இளந்திரையனின் சிறப்பு, அவனுடைய விருந்தோம்பல் ஆகியவற்றை நாம் காணலாம்.

முல்லைப்பாட்டு: இது 103 அடிகளைக் கொண்டது.  புலவர் நப்பூதனார் பாண்டிய மன்னன் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனுக்காக எழுதியது.  இந்தப் பாட்டில் மன்னனின் பாசறை, அவன் பணியில் உள்ள யவனர், பாசறையில் பணி புரியும் பெண்கள், தண்ணீர் மணி காட்டி, தன் வீரர்களை நினைத்து வருந்தும் மன்னன், மன்னனை நினைத்து ஏங்கும் அவன் மனைவி, ஏழு மாடத்து அரண்மனை, முல்லை நிலத்தின் அழகான வருணனை யாவற்றையும் காணலாம்.

மதுரைக்காஞ்சி: இது 782 அடிகளைக் கொண்டது.  புலவர் மாங்குடி மருதனார் பாண்டிய மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்காக எழுதியது.   மதுரை நகரில் உள்ள கடைகள், நிகழ்வுகள் யாவற்றையும் மிகச் சிறப்பாக நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றார் மாங்குடி மருதனார்.  இந்த நூலில் நெடுஞ்செழியனின் நால்வகைப் படையின் வலிமை,  அவனது வீரமும் சிறப்பும், பாணர்களுக்கு யானைகளையும் பொன்னால் செய்த தாமரை மலர்களை மன்னன் கொடுப்பது, பாண்டிய நாட்டின் மருதம், முல்லை, குறிஞ்சி, பாலை, நெய்தல்  ஆகிய நிலங்களின் சிறப்பு, மதுரை நகரின் கோட்டையும், அகழியும், நாள் அங்காடி, இரவு அங்காடி, பௌத்தப் பள்ளி, சமணப் பள்ளி, அந்தணர் பள்ளி, நீதி மன்றம், இரவின் மூன்று சாமங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள், மதுரையின் ஒலிகள், தொழில் மாக்கள், மதுரையின் சிறப்பு யாவற்றையும் நாம் காணலாம்.

நெடுநல்வாடை: இது 188 அடிகளைக் கொண்டது.  புலவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் எழுதியது. மன்னனின் பெயர் கிடைக்கவில்லை.  ஆனால் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்காக எழுதப்பட்டது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.  இந்தப் பாட்டில்  நீண்ட குளிர் காலத்தினால் துன்பத்தில் தவிக்கும் இடையர்கள், பறவைகள், குரங்குகள், மற்றும் மாடுகள், மழைக் காலத்தின் செழிப்பு, மாலை நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபடும் பெண்கள், அரண்மனையைக் கட்டும் வல்லுநர், அரண்மனையின் அமைப்பு, அந்தப்புரத்தின் அமைப்பு, அரசியின் அழகிய வேலைப்பாடு அமைந்த கட்டில், அரசி கணவனை நினைத்து வருந்தும் நிலைமை, பாசறையில் மன்னனின் நிலைமை யாவற்றையும்  காணலாம்.

குறிஞ்சிப்பாட்டு: இது 261 அடிகளைக் கொண்டது.  புலவர் கபிலர் ஆரிய மன்னன் பிரகதத்தனுக்குத் தமிழரின் களவு முறைத் திருமணத்தை இந்தப் பாடல் மூலம் விவரிக்கின்றார்.   தோழி தலைவிக்கும் தலைவனுக்கும் இடையே ஏற்பட்ட அன்பைப் பற்றி தலைவியின் தாயிடமும் செவிலித் தாயிடமும் கூறி, திருமணம் வேண்டுவதை ‘அறத்தோடு நிற்றல்’ என்று தமிழ்ச் சான்றோர் கூறினர்.   இந்தப் பாட்டில் தோழி ஒருத்தி தலைவியின் தாயிடம், தலைவி தலைவனைத் தினைப் புனத்தில் எப்படிச் சந்தித்தாள், காட்டு யானையிடமிருந்து தலைவன் அவர்களை எப்படிக் காப்பாற்றினான்,  தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே எவ்வாறு அன்பு ஏற்பட்டது,  தலைவன் எவ்வாறு திருமணத்தை நாடுகின்றான், தலைவன் கொடூரமான பாதையில் இரவில் தனியே வருவதால் அவனுக்குத் துன்பம் நேரிடும் என்று தலைவி வருந்துகின்றாள், என்றெல்லாம் விவரமாகக் கூறுகின்றாள்.  கண்கள் சிவக்க அருவியில் குளித்து விட்டு 99 மலர்களால் தலைவியும் தோழியும் தங்களை அலங்கரித்துக் கொள்ளும் காட்சி சிறப்புடையது.

பட்டினப்பாலை: இது 301 அடிகளைக் கொண்டது.   புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் சோழன் கரிகால் பெருவளத்தானுக்காக எழுதியது.  காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றிய விவரங்கள் நிறைந்த நூல் இது.  இந்தப்பாட்டில் சோழ நாட்டின் வளமை, காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு, முனிவர்கள் வாழும் தவப் பள்ளிகள், மறவர்களின் விளையாட்டுக் களம், பரதவர் இருப்பிடம், காவிரிப்பூம்பட்டினத்தின் இரவு நிகழ்ச்சிகள், வரி வசூலிப்பவர்கள், ஏற்றுமதி, இறக்குமதி, மாளிகைகள், பல்வேறு கொடிகள், உழவர், அந்தணர், வணிகர் ஆகியோர் பற்றிய விவரங்கள், ஊரின் செல்வம், கரிகாலனின் போர்த் திறமை, யாவற்றையும் நாம் காணலாம்.

மலைப்படுகடாம் 
(கூத்தராற்றுப்படை) இது ஒரு ஆற்றுப்படை நூல்.  583 அடிகளைக் கொண்டது.  புலவர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் குறுநில மன்னன் நன்னன் வேண்மானுக்காக எழுதியது.   இந்தப்பாட்டில் பாணர் குடும்பம் பல்வேறு இசைக் கருவிகளை சுருக்குப் பைகளில் கட்டிக் கொண்டு செல்வது, நன்னனின் சிறப்பு, நவிர மலையின் தன்மை, பாதையில் உள்ள நல்லதும் பொல்லாததும், கானவர் குடியும் விருந்தோம்பலும், நன்னனின் மலை நாட்டுச் செல்வம், இரவில் பயணம் கூடாது என்ற அறிவுரை, கவணிடமிருந்து தப்புதல், வழுக்கி விழாமல் பாதையில் செல்லுதல், இறைவனைத் தொழுது செல்லுதல், இரவில் குகையில் தங்குதல், மலைப் பாம்பிடமிருந்து தப்பித்தல், மலை மக்களின் விருந்தோம்பல்,  மலையின் ஒலிகள், வழியில் காணும் கோட்டைகளும் நடு கற்களும், உதவும் மறவோர், சிற்றூரின் விருந்தோம்பல், உழவர்களின் உதவி, நன்னனின் அரண்மனை, நன்னனின் கொடைத் தன்மை யாவற்றையும் நாம் காணலாம்.


About the Author

Hello I'm the Authour and Admin of Muththamizh Blog Website facebooktwittertelegraminstagram

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.