(1764 ம் ஆண்டு மதுரையின் வரைபடம்)
மேல்காணும் வரைபடத்தில் மூலம் மதிற்சுவர்களால் சூழ அமைக்கப்பட்ட கோட்டை நகராக 1764 ம் ஆண்டில் மதுரை விளங்கியதை தெளிவாக அறிந்து கொள்ளலாம். (இது 1764 ம் ஆண்டு மருதநாயகத்திடமிருந்து கோட்டையை மீட்பதற்காக ஆங்கிலேயர் முற்றுகையை விளக்கும் ஃபிரெஞ்சு வரைபடம் ஆகும்) .
பழந்தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுச் சான்றுகளின்படி மதிரை - என்பதே முற்காலத்தில் வழங்கிய பெயராகும். பிற்கால இலக்கியங்கள் மட்டுமே மதுரை,
கூடல், மல்லிகை மாநகர்,நான்மாடக்கூடல், திரு ஆலவாய் போன்ற பல்வேறு பெயர்களால் குறிக்கப்படுகிறது.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்ப் பிராமி கல்வெட்டுகளில்... மத்திரை, மதிரை என்றே காணப்படுவதாக தமிழகக் கல்வெட்டியலாளர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிடுகிறார்.
முற்காலங்களில் கடல்கோள்களின் சீற்றத்தால் பல புகழ்பெற்ற தமிழ் நகரங்கள் அழிந்தன. பாண்டியர்களின் தலைநகரையும், கடல்கோள்களிடமிருந்து காக்கும் வண்ணம் யானைகளால் நகர்த்தி கொண்டு வரப்பட்ட பெரும் பாறைகளை அடுக்கி மதில்கள் எழுப்பப் பட்டன.
பெருமதில்களுக்குள் சிறுமதிலும் அதற்குள் குறு மதிலும் என மூன்று அரண்களுக்குள் இருந்த நகரம் “மதில்நிரை” என அழைக்கப் பட்டது. இவ்வாறு நகர் எங்கும் மதில் எடுத்ததால் 'மதில் நிரை நகராக' விளங்கியது. அதுவே பின்னாளில் மதுரை ஆனது என்கின்றனர்.
மதுரை என்பது குமரி மலைத் தொடரில் பிறந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்த
பஃறுளி ஆற்றங்கரையில் அமைந்த பாண்டியனின் முதல் தலைநகரின் பெயர் எனவும், குமரிக் கண்டம் அழிந்த பிறகு தமது முன்னோரின் தலைநகரமான 'மதுரை' என்ற பெயரையே, தனது தலைநகருக்கு பாண்டிய மன்னன் சூட்டினான் என்றும் கூறப்படுகிறது.
பிற்காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மதுரை நகர் ஒவ்வொரு முறை விரிவு படுத்தப்பட்ட போதும் அதன் கோட்டைச் சுவர்கள் இடிக்கப்பட்டன.
1837 ஆம் ஆண்டில் மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றிலும் உயர்ந்து அமைந்திருந்த கோட்டை மதில் அகற்றபட்டன என்றும் கோட்டை மதிலைச் சுற்றி ஆழமாக வெட்டப்பட்டிருந்த அகழியானது இடிபாடுகளைக் கொண்டு மூடப்பட்டு புதிய வீதிகள் அமைக்கப்பட்டன என்றும் குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது.