விவேகானந்தர் சொல்லித்தந்த வாழ்க்கைப் பாடம்!
சுவாமி விவேகானந்தர் என்ற பெயர் இன்று இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் உன்னதமான இடம் பிடித்த ஒன்று. மிகச்சிறந்த ஆன்மீகத் தலைவர்களில் முதன்மையானவர். வீரத்துறவி என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். இளைஞர்களின் மனதில் நம்பிக்கை, வீரம் மற்றும் ஆன்மீகத்தை விதைத்தவர். இன்றைய இளைய சமூதாயத்திற்கு உலகளாவிய ஒரு இலட்சிய மனிதர் சுவாமி விவேகானந்தர்.
ஒரு முறை விவேகானந்தர் இமயமலையின் உச்சியில் இருந்த கோயிலுக்குச் செல்வதற்காக மலைமீது ஏறிக் கொண்டிருந்தார். அது ஒரு நீண்ட பாதை. வழியில் ஒரு முதியவர் மலையின் ஓரமாக இருந்த பாறையில் அமர்ந்திருந்தார்.
முதியவர் மிகவும் களைப்பாக இருந்தார். முதியவர் விவேகானந்தரிடம், "அப்பாடி!....இந்தப் பாதையை எப்படிக்கடக்கப் போகிறேன்!.... இனிமேல் என்னால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது!....நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறது!" என்றார்.
விவேகானந்தர் அந்த முதியவர் கூறியதைப் பொறுமையுடன் கேட்டார். பிறகு முதியவரிடம், "பெரியவரே.... சற்று கீழே பாருங்கள்!..... உங்கள் காலுக்குக் கீழே நீண்டு தெரிகின்ற அந்தப் பாதை முழுவதும் உங்களால் கடக்கப்பட்டதுதான்!
உங்கள் முன்னால் தெரியும் பாதையும் விரைவில் உங்கள் காலுக்குக் கீழே வந்துவிடும்!”
விவேகானந்தரின் இந்த தெம்பூட்டும் இந்த வார்த்தைகளைக் கேட்டதும், அந்த முதியவருக்கு உற்சாகம் பிறந்தது! எழுந்து விவேகானந்தருடன் நடக்கலானார்!